ஆண்டவர் ஆளுகை செய்கிறார்

ஆண்டவர் ஆளுகை செய்கிறார்

உன்னதமானவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகைசெய்து, தமக்குச் சித்தமாயிருக்கிறவனுக்கு அதைக் கொடுக்கிறார்… (தானியேல் 4:25).

நாம் அநேக நாட்களாக காத்திருந்த தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு, அனைவருக்கும் ஆச்சரியத்தை கொடுக்கும் வகையில் முடிவுகள் வெளியாகி இருக்கின்றது. கிறிஸ்தவர்களாக கூடி உபவாச ஜெபத்திலும், முழு இரவு ஜெபங்களிலும், தனி ஜெபங்களிலும், குடும்ப ஜெபங்களிலும், குழு ஜெபங்களிலும் இந்த தேர்தலுக்காக நாம் விடாமல் ஜெபித்து வந்திருக்கிறோம். கர்த்தர் அதன்படி, தமக்கு சித்தமானவர்களுக்கு ஆளுகையை கொடுத்திருக்கிறார். அவருடைய பரிசுத்த நாமமே மகிமைப்படுவதாக. 1815-ம் வருடம் ஜீன் மாதம் நெப்போலியன் தனது படையை ஐரோப்பிய நாடுகளுக்கு நேராக திருப்பினான் அவனுக்கு எதிராக இங்கிலாந்து, ரஷியா, ஆஸ்ட்ரியா, புரிசியா, பெல்ஜியம் மற்றும் ஹாலந்து நாடுகள் ஒன்றிணைந்து டியூக் வெலிங்டன் தலைமையில் வாட்டர் லூ என்ற இடத்தில் போருக்காக கூடி வநதனர்.

தனது படையினரிடம், ‘இந்த படை இங்கு நிற்கட்டும், அந்த படை அந்த இடத்தில் நிற்கட்டும், இந்தபடையினர் அந்த முனையில் நிற்கட்டும். இந்த நாளின் முடிவில் இங்கிலாந்து பிரான்ஸ் நாட்டின் காலடியில்! அந்த வெலிங்டன் எனது கைதியாக போகிறான்!’ என்று முழங்கினான்.

அப்போது அவனுடைய படைதளபதி அவனிடம், ‘மனிதன் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும் (Man proposes but God disposes)” என்ற பழமொழியை அவனுக்கு ஞாபகப்படுத்தினார். ஆனால் அதனால் கோபமுற்ற நெப்போலியன், அவரை உற்று பார்த்து, ‘நெப்போலியன் ஒன்று நினைக்க நெப்போலியனே அதை தீர்மானிப்பான். அதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்’ என்று பதிலடியாக கொடுத்தான். அந்த நேரத்திலிருந்து வாட்டர் லூவில் நெப்போலியனின் படைகள் பின்வாங்க ஆரம்பித்தன. எப்படியெனில் தேவன் அந்த இடத்தில் கல்மழையையும், விடாத மழையையும் அனுப்ப, நெப்போலியனின் படைகள் தாக்குபிடிக்க முடியாமல், பின் வாங்க ஆரம்பித்தன. அந்த நாளின் இறுதியில் பிரான்ஸ் இங்கிலாந்தின் காலடியிலும், நெப்போலியன் வெலிங்டனின் கைதியாகவும் பிடிபட்டனர். தேவனுக்கு விரோதமாக நின்று ஜெயித்தவர்கள் என்று சரித்திரலேயே இல்லை!

உன்னதமானவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகைசெய்து, தமக்குச் சித்தமாயிருக்கிறவனுக்கு அதைக் கொடுக்கிறார்… என்று வேத வசனம் சொல்கிறது. கர்த்தரே இந்த உலகத்தில் அவருக்கு சித்தமானவர்களை கொண்டு ஆட்சி செய்கிறார். அவராலே தான் ராஜாக்கள் ஆட்சியை பிடிக்கிறார்கள், ஆட்சி செய்கிறார்கள். ஆனால் கர்த்தருக்கு விரோதமாக பாவ காரியங்களில், ஆட்சி செய்கிறவர்களும், மக்களும் ஈடுபடும்போது, அதற்கேற்ற தண்டனையை, நியாயத்தீர்ப்பை கர்த்தர் அந்த தேசத்தின் மேல் அனுப்புவார். ஒருவேளை ஜப்பானுக்கு வந்த நியாயத்தீர்ப்பு அதுவாகவும் இருக்கலாம். நிர்வாண படங்களை எடுத்து 17 டிரில்லியன் யென்களை ஒரு வருடகாலத்திற்கு சம்பாதித்த ஜப்பானை, அவர்கள் கர்த்தரை கோபமூட்டும் பாவமான காரியங்களில் ஈடுபட்டபடியால், அதன் மேல் நியாயமான நியாயத்தீர்ப்பை கர்த்தர் கொடுத்தார்.

அதே சமயம், ‘பிடுங்குவேன், இடிப்பேன், அழிப்பேன் என்று நான் ஒரு ஜாதிக்கு விரோதமாகவும், ஒரு ராஜ்யத்துக்கு விரோதமாகவும் சொன்னமாத்திரத்தில், நான் விரோதமாய்ப் பேசின அந்த ஜாதியார் தங்கள் தீங்கைவிட்டுத் திரும்பினால், நானும் அவர்களுக்குச் செய்ய நினைத்த தீங்கைச் செய்யாதபடிக்கு, மனம் மாறுவேன்’ (எரேமியா 18:7-8) என்றும் கர்த்தர் சொல்கிறார். நம் நாடுகளில் தேவ கோபம் வராதபடி நாம் திறப்பின் வாசலில் நின்று ஜெபிக்கிற போது, நம் தேசத்தின் மேல் வர இருந்த, இருக்கிற நியாயத்தீர்ப்பை தேவ கிருபையால் நாம் தடுத்து நிறுத்துகிறோம்.

இராஜாக்களை தள்ளி இராஜாக்களை ஏற்படுத்தும் நமது ஆண்டவரையே நாம் நம் தேசத்தின் ஷேமத்திற்காக சார்ந்து கொள்வோம். எந்த ஆட்சி வந்தாலும், அவர்கள் தேவனுக்கு விரோதமான காரியங்களில் ஈடுபடாதபடி, தேவ கோபத்தை கொண்டு வராதபடி நலமான ஆட்சி செய்கிறவர்களாக மாற நாம் திறப்பின் வாசலில் நின்று மன்றாடுவோம். ‘என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு ஷேமத்தைக்கொடுப்பேன்’ (2 நாளாகமம் 7:14) என்று சொன்ன கர்த்தருடைய வார்த்தைகளின்படி கிறிஸ்தவர்களாகிய நாம் நம்மை தாழ்த்தி, ஜெபம்பண்ணி, நம் பொல்லாத வழிகளை விட்டு, திரும்பி, நம் தேசத்திற்காக மன்றாடுவோம். அப்போது தேவன் நம் தேசத்திற்கு ஷேமத்தை நிச்சயமாகவே கொடுப்பார். ஆமென் அல்லேலூயா!

ஆண்டவர் ஆளுகை செய்கின்றார்
அனைத்து உயிர்களே பாடுங்கள்
..

நம் கர்த்தரோ நல்லவரே கிருபை உள்ளவரே
நம்பத்தக்கவர் தலைமுறைக்கும் என்றென்றும் நம்பத்தக்கவர்
..

ராஜாதி ராஜா கர்த்தாதி கர்த்தர்
எப்போதும் இருப்பவர் இனிமேலும் வருபவர்

ஜெபம்:
எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, எந்த ஆட்சி வந்தாலும் போனாலும், நீர் மாறாதவராக இராஜாதி இராஜாவாக என்றும் ஆளகை செய்கிறவராக இருப்பதற்காய் உமக்கு ஸ்தோத்திரம். தற்போது நடந்து முடிந்த தேர்தலில் உமக்கு சித்தமானவர்களை ஆட்சியில் அமர்த்தியதற்காய் உமக்கு ஸ்தோத்திரம். தேவனுக்கு விரோதமான எந்த பாவத்திலும் ஈடுபட்டு, தேவ கோபத்தை கொண்டு வராதபடி காத்து கொள்வீராக. உம்முடைய சுவிசேஷத்திற்கு தடை கொண்டு வராதபடி காத்து கொள்ளும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.