நீங்கள் விசேஷித்தவர்கள்

நீங்கள் விசேஷித்தவர்கள்

ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியஙகளில் சேர்த்துவைக்கிறதுமில்லைள; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்ள; அவைகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா? – (மத்தேயு 6:26).

சாலையோரத்தில் இருந்து மரமொன்றில் இரண்டு அடைக்கலான் குருவிகள் உட்கார்ந்து பேசி கொண்டிருந்தன. ஒன்று கேட்டது, ‘ஏன் இந்த மக்கள் கூட்டம் எப்போதும் கவலையோடே அங்கும் இங்கும் அலைகிறார்கள்? எனக்கொன்றும் புரியவில்லை’ என்றது. மற்றொன்று கூறியது, ‘உன்னையும் என்னையும் மறக்காமல் அனுதினமும் பிழைப்பூட்ட ஒரு பரமபிதா இருப்பது போல இவர்களுக்கு இல்லை என்று நினைக்கிறேன். அதனால்தான் அவர்கள் இப்படி கவலையோடு இருக்கிறார்கள்’ என்றது. இவர்களின் பேச்சை கேட்டுக் கொண்டிருந்த மரத்தாலும் அமைதியாய் இருக்க முடியவில்லை. அதுவும உரையாடலின் இடையில் இணைந்து கொண்டது, ‘குருவி நண்பர்களே! நானும் பல வருஷமா இதே இடத்தில் நின்று பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். மக்கள் தேவையில்லாததற்கெல்லாம் கவலைப்படுகிற மாதிரி இருக்கிறது.

என்னையும், கீழே இருக்கிற குட்டி புல், பூண்டுகளையுமே அழகா உடுத்துவிக்கிறவர் இவர்கள் தேவையை சந்திக்க மாட்டாரா என்ன? இவர்கள் நம்மைப் போல கடவுளை நம்ப மாட்டார்களோ என்னவோ’ என்றது. ‘பார்த்தா அப்படித்தான் தெரியுது’ என்று சொல்லி எல்லாம் சிரித்தன. குருவிகள் மரத்திடம் விடைபெற்றுக் கொண்டு தேவனால் தங்களுக்கு ஆயத்தமாக்கப்பட்ட உணவை உண்ண பறந்து சென்றன.

ஆம், உண்மையிலேயே மனிதர்களாகிய நாம் வேத்திலுள்ள மார்த்தாளை போல அநேக காரியஙக்ளைக் குறித்து கவலைப்பட்டு கலங்கி கொண்டிருக்கிறோம். வாலிப வயதினருக்கு தலை முடி உதிர்ந்தால் கவலை, நரைத்தால் கவலை, முகத்தில் பரு வந்தால் கவலை, இப்படி பல கவலைகள். திருமண வயதில் உள்ளோருக்கு படித்ததற்கு ஏற்ற வேலை அமையுமா என்ற கவலை, நல்ல வாழ்க்கை துணை கிடைக்குமா என்ற கவலை. குடும்பமானவர்களுக்கு, பிள்ளைகள் நல்லவர்களாக வளருவார்களா என்ற கவலை, பிள்ளைகளின் எதிர்காலத்தை பற்றி கவலை.. இப்படியாக நிமிஷத்திற்கு ஒரு கவலை, நேரத்திற்கு ஒரு கவலை, நாளுக்கொரு கவலையாக சுமக்கிறோம். நாம் நன்றாக கவனித்து பார்ப்போமென்றால் அதிகமாக நாம் தேவையில்லாத காரியங்களுக்காகவே கவலைப்படுகிறோம் என்று புரியும்.

ஆனால் வேதம் சொல்லுகிறதென்ன, இருபது ரூபாய் கூட பெறாத ஒரு அடைக்கலான் குருவியை கூட தேவன் மறப்பதில்லையாம்! அப்படியிருக்கும்போது, அவர் நம்மை நினையாமலிருப்பது எப்படி? அவரது பார்வையில் நாம் விசேஷித்தவர்கள் அல்லவா? ஆம், அவர் நமது தலையிலுள்ள் முடியையெல்லாம் எண்ணி வைத்திருக்கின்றார்.

அதாவது மிகவும் அற்பமான மயிரை (முடி) கூட கணக்கில் வைத்திருக்கின்றார் என்றால் நம் வாழ்வின் திட்டங்களையும் செயல்பாடுகளையும் குறித்து எப்படி சிந்தியாமல் இருப்பார்? தாயின் கருவிலே தெரிந்தெடுத்தவர் எப்படி கைவிடுவார்? பறவைகளை போஷிப்பவர், அவரை தேடுகிற உங்களை பட்டினியாய் போட்டு விடுவாரா? காட்டு புஷ்பங்களுக்கு விதவிமான கலர்களைக் (வர்ண்ணங்களை) கொண்டு உடுத்துவிப்பவர் உங்களுக்கு ஆடை தர மாட்டாரா? அவரிடம் உங்கள் பாரங்களை சொல்லும்போது அனைத்து தேவைகளையும் சந்திக்க அவர் போதுமானவராய் இருப்பார்.

பிள்ளைகளை குறித்த பாரம் அநேக பெற்றோருக்கு இருப்பதுண்டு. வாலிப பிள்ளைகளை வைத்திருப்போர் அவர்களுடைய எதிர்காலத்தை குறித்து எப்படி அமையுமோ என்று கவலை அவர்களை வாட்டி வதைப்பதால், சரியாக தூங்க மாட்டார்கள், கவலைபட்டுக்கொண்டே இருப்பார்கள். கவலைப்படும்போது பாருங்கள், என்ன சாப்பிட்டாலும் அது உடம்பில் ஒட்டாது. அவர்கள் மெலிந்து போய் கொண்டிருப்பார்கள். அதைதான் வசனம், ‘கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்?’ என்று கேட்கிறது. ‘ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை’ – (ஏசாயா 49:15) என்று வாக்குதத்தம் செய்தவர், நீங்கள் மறந்தாலும் அவர் உங்கள் பிள்ளைகளை மறப்பதில்லை. ஆகையால், பிரியமானவர்களே, உங்களை விசாரிக்க கர்த்தர் இருக்கும்போது, உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் அவருடைய கரத்தில் இருக்கும்போது நீங்கள் ஏன் கவலைப்பட வேண்டும்? அவரிடம் உங்கள் மனபாரத்தை சொல்லுங்கள். பின் மகிழ்ச்சியாயிருங்கள். கர்த்தர் எல்லாவற்றையும் பார்த்து கொள்வார். ஆமென் அல்லேலூயா!

கவலையினால் சரீர அளவில்
ஒன்றையும் கூட்டவே முடியாது
நாளைய தினத்தை குறித்து
கவலைப்பட வேண்டாம்!
..

கர்த்தர் உன்னை விசாரிப்பார்
காத்தர் உன்னை ஆதரிப்பார்
கர்த்தர் உன்னை தாங்கிடுவார்
கர்த்தர் உன்னை தேற்றிடுவார்

ஜெபம்:
எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, இந்த புதிய மாதத்தின் முதலாம் நாளை காண கிருபை செய்தீரே உமக்கு நன்றி. இந்த வருடத்தின் கடைசி மாதத்தை நாங்கள் சுகத்தோடு பெலத்தோடு காண தேவரீர் பாராட்டின் கிருபைக்காக நன்றி. இந்த மாதம் முழுவதும் உம்முடைய கிருபையால் எங்களை சூழ்ந்து கொள்வீராக. எங்கள் காலங்கள் உம்முடைய கரத்தில் இருப்பதால் நாங்கள் எதைக் குறித்தும் கவலைப்படாதபடி எல்லாவற்றையும் பார்த்து கொள்ளுகிற, எங்கள் தேவைகளை சந்திக்கிற உம்மிடம் எங்கள் பாரங்களை வைத்து விட எங்களுக்கு கிருபை செய்யும். அடைக்கலான் குருவிகளை பார்க்கிலும் நாங்கள் உம்முடைய பார்வையில் விலையேறப்பெற்றவர்களாக, விசேஷித்தவர்களாக இருக்கிறபடியால், எங்கள் கவலைகளை உம்முடைய பாதத்தில் வைத்து விடுகிறோம். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.